சிந்தை தெளி சிறுமையை அழி உன்
சித்தம் செதுக்க நீதான் உளி
அண்ட வெளி ஆயிரம் வழி எக்
கண்டம் கடக்க நீயே ஒளி
எண்ணித் துணி எழுவதே பணி உன்
சுற்றம் செழிக்க நீதான் இனி
வெற்றிக்கனி கொள்வதே தனி நீ
திட்டம் வகுத்து சேர்வாய் அணி
உன்னை ஒருத்தன் பொய்ப்பிப்பதா உன்
தலைக்குள் புகுந்துனை நடப்பிப்பதா
உண்மை உணர்ந்து புறப்பட்டு வா உனை
முற்றாய் முழுதாய் புடமிட்டு வா
வைச்சா குடும்பி சிரைச்சா மொட்டை
நிண்டு நிதானிப்பத ஏன்தான் நீ விட்ட
உணர்ச்சிப்பேச்சு வார்த்தைவாள் வீச்சு
உருவேறி எல்லாம் உருக்குலைஞ்சு போச்சு
போதை தாலைக்கேறி போக்கு மாறியாச்சு
மாய வார்த்தைக்கெல்லாம் யாவும் பலியாச்சு
பாதை தெளிவில்லை பார்வை சரியில்ல
நின்று சுத்திப் பாக்க நேரம்கூட இல்ல
பொறிமுறையோட அவன் பொறி வைக்கிறான்
நீ எலி போல ஓடிப்போயே தலை வைக்கிறாய்
உன் நிலத்து நீருறிஞ்சி கோலா விக்கிறான்
அட அதை வாங்கி ஏமாந்து நீ கூலா நிக்கிறாய்
வெள்ளையரின் ஆட்சியென சொல்லிப்பயனில்லை
இலாப வெறிக்கூட்டத்துக்கு தோல் நிறங்கள் இல்லை
கிடைச்சத வைச்சு அவர் அடிப்பாரே கொள்ளை உன்தன்
இனத்தவர் ஆயிடினும் விதிவிலக்கில்லை
கண்டம் விட்டு கண்டம் பெரும் கம்பனிகள் பாயும் அது
கண்ட இடமெல்லாம் பெரு இலாப வேட்டை ஆடும்
எவ்விடமும் கொள்ளை வளருது தொல்லை
விழிப்பாய் நீ மெல்ல நேரமதிகமில்லை
விளைநிலம் போச்சு விவசாயம் போச்சு
சொந்தக்காலில் நிண்டவனை முடமாக்கியாச்சு
சிறுதொழில் போச்சு சுய தொழில் போச்சு
சொந்தக்கட வைச்சவன கூலிக்கமத்தியாச்சு
அங்குமிங்கும் கட்டடங்கள் வந்து குவியுது
புத்தம் புது பெருந்தெருக்கள் நீண்டு விரியுது
இவை மட்டும் சமூகத்தின் வளர்ச்சிகள் இல்லை
தின்ன வழியற்றவனை பார்க்க யாரும் இல்லை
அடிப்படை பிரச்சனை ஆயிரம் இருக்குது
அணுகாமல் அப்படியே மறைச்சுக் கிடக்குது
கண்ணுக்குக் குளிர்ச்சியெல்லாம் வெறும் சுத்துமாத்து
துருவித் தோண்டிப் பாத்தா மாட்டுமே கூத்து
மாயை உலகத்தை நீ நம்பி வாழுறாய்
நடிக்கிறவனப் போய் தலைவனாக்கிறாய்
உணர்சிபொங்கி ஒரு வெறி நாயாகி நீ
அவனின் வளர்ச்சிக்காய் அழிந்து போகிறாய்
இந்த தலைமை இனித் தேவையில்லை
தூக்கியெறிந்து விடு தொலையும் தொல்லை
தோழனாகி நீ தோள் கொடுத் தோடு
உரிமைக்காக நீ சேர்ந்து களமாடு